உத்தரகண்ட் மாநிலத்தில் திருமணத்தன்று மணமகனை அவரது முன்னாள் காதலி அறைந்ததால் அவரின் தம்பிக்கு மணப்பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஆவ்திபுர்ஹல் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தன்று மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொள்ளும் முன்பு அங்கு வந்த இளம் பெண் ஒருவர் மணமகனை பளார், பளார் என அனைவர் முன்பும் கன்னத்தில் அறைந்தார்.

என்னை காதலித்து, நீதிமன்றத்தில் திருமணம் செய்து தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறாயா என்று கூறி மணமகனை அவர் அறைந்தார். உடனே மாப்பிள்ளை வீட்டார் ஓடி வந்து அந்த பெண்ணை விலக்கிவிட்டனர். அதன் பிறகு அந்த பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை பார்த்த மணமகள் அந்த வாலிபரை மணக்க மறுத்தார். இதையடுத்து இருவீட்டாரும் காவல் நிலையம் செல்லாமல் பிரச்சனையை தீர்க்க விரும்பினர்.

அவர்கள் பஞ்சாயத்தை அணுகினர். தங்கள் குடும்பத்திற்கு மேலும் தலைக்குனிவு ஏற்படாதவாறு ஏதாவது செய்யுமாறு மாப்பிள்ளை வீட்டார் பஞ்சாயத்தாரை கேட்டுக் கொண்டனர். மணமகனின் தம்பியை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று பஞ்சாயத்தார் மணமகளிடம் கேட்க அவரும் சம்மதம் என்றார். இதையடுத்து மணமகனின் தம்பிக்கும், மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

Post a Comment

 
Top