டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயாடிவி நிருபரிடம் ஆவேசப்பட்ட விஜயகாந்த் மைக்கை தூக்கி வீசிவேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் என்றாலே அகராதியில் கோபம் என்ற வார்த்தை இருக்கும் போல. நேற்று முழுவதும் எதிர்கட்சித்தலைவர்களை சந்தித்து பேசி அனைவரையும் ஒருங்கிணைத்து இன்று டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்தது வரை ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்தார் விஜயகாந்த்.
நிஜ எதிர்கட்சித்தலைவராக செயல்பட்ட விஜயகாந்த் பிரதமரை சந்தித்து பேசிய பின்னர் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அமைதியான முறையில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்று கொண்டிருந்தது. பிரதமரை சந்தித்து பேசியது பற்றி விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். இடை இடையே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் இன்னும் படித்துப் பார்க்கவில்லை படித்து விட்டு பதில் சொல்கிறேன் என்றார்.
ஜெயா டிவி, தினமலர் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். திடீரென்று எரிச்சலடைந்த விஜயகாந்த், ஜெயாடிவி செய்தியாளர் மீது கோபப்பட்டார். ஜெயா டிவி ரிப்போர்ட்டர்னா கொம்பா முளைச்சிருக்கு என்று கேட்ட அவர், நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே என்றார்.
ஒரு கட்டத்தில் ஜெயா டிவி, தினமலர் ரிப்போர்டருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறிய அவர், சொன்னதை கேட்கா விட்டால் மைக்கை தூக்கி வீசிவிடுவேன் என்றார். கோபப்பட்ட விஜயகாந்தை அருகில் அமர்ந்திருந்த திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமாதானப்படுத்தினர். ஆனாலும் சமாதானமடையாத விஜயகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.
இதனையடுத்து அவரது மைத்துனர் சுதீஷ், கோபத்தோடு போன விஜயகாந்தை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசினார் விஜயகாந்த். ஜெயாடிவி செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கோபப்படுவது புதிய விசயமல்ல. இது தொடர்நிகழ்வாகவே மாறிவருகிறது குறிப்பிடத்தக்கது.
Post a Comment