நேபாள நாட்டில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில், அந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக அந்நாட்டில் சிக்கி தவித்த குழந்தைகள் உள்பட 500 பேர் மீட்கப்பட்டு, இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று பின்னிரவிலும், இன்று அதிகாலையிலும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானங்கள் தலைநகர் டெல்லியை வந்தடைந்தன. நேற்று பின்னிரவு 10:45 மணியளவில் சி-130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் என்ற விமானத்தில் 55 பேர் முதற் கட்டமாக டெல்லி வந்து சேர்ந்தனர்.

அதை தொடர்ந்து நேற்று நள்ளிரவில் சி-17 கிளோப்மாஸ்டர் 3 விமானம் மூலம் குழந்தைகள் உள்பட 101 பேர் டெல்லி வந்தனர். இன்று அதிகாலை ஐ.எல். 76 விமானப்படை விமானத்தில் மேலும் 152 பேர் அழைத்து வரப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 4.45 மணியளவில் சி-17 க்ளோப் மாஸ்டர் 3 விமானம் மூலம் 247 பேர் டெல்லி வந்து சேர்ந்தனர்.

அந்நாட்டில் சிக்கி தவிக்கும் மேலும் பலரையும் மீட்கும் வகையிலும், நிவாரண பணிகளை அனுப்பும் பொருட்டும், இன்று மட்டும் 10 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் சிதான்ஷு கர் கூறியுள்ளார்.

Post a Comment

 
Top