
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கி வரும் 'புலி' படத்தின் கடைசி கட்ட 'டாக்கீ' படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் படத்தின் வசனம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்து விடுகிறார்களாம். அதன் பின் இரண்டு பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளார்கள். அநேகமாக கம்போடியா நாட்டில் அந்தப் பாடல்களைப் படமாக்குவார்கள் எனத் தெரிகிறது. இதுவரை விஜய் நடித்துள்ள படங்களிலேயே இந்தப் படத்திற்கு அதிக பட்ஜெட் செலவாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரித்திரக் காலக் கதையும் இன்றைய காலக் கதையும் கலந்து வருவதால் பிரம்மாண்டமான அரங்குகள், கிராஃபிக்ஸ் காட்சிகள் என பணத்தை தண்ணீராக செலவழித்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரது ஆடை அலங்காரங்களுக்கே ஆன செலவு கோடியைத் தொட்டிருக்கலாம் என்றும் பேசிக் கொள்கிறார்கள். விஜய்யின் அறிமுகப் பாடலுக்கு மட்டுமே சுமார் 5 கோடி செலவழித்திருக்கிறார்களாம். படப்பிடிப்பு நடக்கும் போதே படத்திற்கான எடிட்டிங் வேலைகளையும் நடத்தி வருவதால் ஜுன் அல்லது ஜுலை மாதத்ில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனால், மொத்த படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். நிச்சயம் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க படங்களின் வரிசையில் இந்தப் படம் இடம் பெறும் என்று படக் குழுவினர் தெரிவிப்பதாக கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.
Post a Comment